கொரோனா தடுப்பு பணியில் நாமக்கல் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது அமைச்சர் சரோஜா பேட்டி

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அளவில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் சரோஜா கூறினார்.
கொரோனா தடுப்பு பணியில் நாமக்கல் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது அமைச்சர் சரோஜா பேட்டி
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணி மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் தமிழக அளவில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. நமது மாவட்டத்தில் தொடக்கம் முதலே வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு சரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே அவர்களை கொரோனா எளிதில் தாக்கும் என்பதால் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக 479 முகாம்கள் நடத்தப்பட்டு, 53 ஆயிரத்து 183 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் சத்துணவு சாப்பிடும் 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும், அங்கன்வாடி குழந்தைகள் 17 லட்சம் பேருக்கும் அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 70 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 3 நாட்களில் இப்பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு வாரத்தில் கொடுத்து முடிக்கப்படும். அமைச்சர் தங்கமணி நலமுடன் உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பாலமுருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com