

கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
மொத்தம் 247 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடைந்து 18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்து 171 மதிப்பில் முதிர்வுத்தொகைக்கான காசோலை 10 பயனாளிகளுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு 10 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.
மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 171 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூஷ்ணாதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், மாற்றுத்திறனாளிகள் மனுக்களை வெளியில் வந்து கலெக்டர் வாங்குகிறார். ஆனால் அந்த மனு எந்த அதிகாரியிடம் செல்கிறது என்று தெரியவில்லை. ஆகவே கலெக்டருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வெளியில் வருவார்கள் என்றார்.
நெல்லிக்குப்பம் ஜானகிராம்நகரில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி ரகுபதி, தனக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று மனு அளித்தார்.
அண்ணாகிராமம் ஒன்றிய செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்கள் ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்டோர் நாட்டு செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார்கள். அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சூளைக்கு மண் எடுக்க மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தவும், சூளைக்கான அனுமதியும், மண் எடுக்க அனுமதியும் கேட்டு கடலூர் கனிம வளத்துறை அலுவலர்களிடம் மனு கொடுத்தால், அதை கிடப்பில் போட்டு விட்டனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், போலீசார் எங்களை மிரட்டி வருகின்றனர். ஆகவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மாநில மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், கடலூர் பெண்ணையாற்றில் எனதிரிமங்கலம், திருகண்டேஸ்வரம், வான்பாக்கம், அழகியநத்தம் மற்றும் கெடிலம் ஆற்றில் காமாட்சி பேட்டை, பண்ருட்டி, திருமாணிக்குழி, வானமாதேவி, விலங்கல்பட்டு, சுந்தரர்பாடி, திருவந்திபுரம் ஆகிய இடங்களில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.