கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியாகினர்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.

பின்னர் 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா(வயது 13) என்ற மகளும், கவியரசன்(11) என்ற மகனும் இருந்தனர். நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர்.

நேற்று நிஷாவும், கவியரசனும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். பின்னர் மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது.

இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com