‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி கடலூரில், தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி கடலூரில் தி.மு.க. சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி கடலூரில், தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்
Published on

கடலூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தி.மு.க.வின் இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தி.க. உள்ளிட்ட தோழமை கட்சிகளும் ஆதரவு தெரி வித்து இருந்தன.அதன்படி நேற்று கடலூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்காக தி.மு.க.வினர் ஏராளமானோர் அண்ணாபாலம் அருகில் திரண்டு நின்றனர். அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

தி.க. துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜயசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு இள.புகழேந்தி, சபாபதி மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சண்முகம், மருதூர் ராமலிங்கம், மாவட்ட அவை தலைவர் தங்கராசு, முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர செயலாளர்கள் ராஜா, செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் மனோகர், முத்துசாமி, சிவக்குமார், சுப்புராம், காசிராஜன், முத்து. பெருமாள், மாமல்லன், மதியழகன், கடலூர் வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ்விஜயராகவன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் நவ்ஷாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் ரபிகுர்ரகுமான் உள்பட தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த மனித சங்கிலியில் தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சியினர் லாரன்ஸ் ரோடு சிக்னலில் இருந்து அண்ணாபாலம், பாரதிசாலை முனை வரை கை கோர்த்தபடி வரிசையில் நின்றனர். அப்போது, கடலூர் சீமாட்டி சிக்னலில் இருந்து அண்ணா பாலம் வரை கட்சி தொண்டர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் தொல்.திருமாவளவன் அமர்ந்து பயணம் செய்தார்.
முன்னதாக இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-

மாநில உரிமைகளை பறிக்கும் விதமாகவும், மாணவர்களை பாதிக்கிற வகையிலும் மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. ஒருங்கிணைத்துள்ள இந்த மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஏதேச்சதிகார போக்கு. மத்திய அரசும், மாநில அரசும் சில வாரங்களாகவே இந்த நீட் தேர்வு தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் நாடகம் ஆடி வருகின்றன. மக்களை ஏய்க்க முயற்சி செய்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏன்? என்று விளங்கவில்லை. இந்த போக்கை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நீட் தேர்வை விலக்குகிற வரையில் போராடுவோம். தமிழக அரசு பா.ஜ.க. அரசின் பிராக்சி (பதில்ஆள்) அரசாக செயல்படுவதால் தமிழ், தமிழ் இனம், தமிழ் தேசியம் பேசுகிற அனைவரையும் ஒடுக்குகிறது. தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த ஒடுக்குமுறையை தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது ஏவுவதை கண்டிக்கிறோம்.

சமூக வலை தளங்களில் கருத்து தெரிவிக்கிறவர்களையும், தமிழ் வாழ்க என்று எழுதுகிறவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இது அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை பிரகடனம் என்பதை போல உள்ளது. தமிழகத்தை அ.தி.மு.க. ஆள்கிறது என்பதை விட பா.ஜ.க. ஆட்சி செய்கிறது என்பது தான் இந்த நடவடிக்கை மூலம் தெரிகிறது. மனித சங்கிலி போராட்டத்துக்கு எங்கும் தடை விதிக்கப்படவில்லை. இதை மீறி மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இது அபாயகரமான திட்டம். இந்த திட்டத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அதைத்தொடர்ந்து தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி சேருமா? என்று நிருபர்கள் திருமாவளவனிடம் கேட்டனர். அதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

இதேபோல் விருத்தாசலத்தில் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துக்குமார், குழந்தை தமிழரசன், மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட துணை செயலாளர் திராவிட மணி, தொகுதி செயலாளர் அய்யாயிரம், மருதையன், இந்திய தேசிய முஸ்லிம் லீக், மாவட்ட செயலாளர் சுக்கூர், முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சி ஜாகீர், ஷேக்தாவுத், திராவிடர் கழகம் முத்து கதிரவன், இளந்திரையன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விருத்தாசலம் பாலக்கரை, ஜங்ஷன் ரோடு, கடலூர் சாலை ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் திரண்டு வந்து, கைகோர்த்து நின்று, நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com