தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி

தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கூச்சுவாடி கிராமம். மலை கிராமமான இப்பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று இந்த அரசு பஸ் தேன்கனிக்கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தது. வழக்கம் போல பள்ளி முடிந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களும் ஊருக்கு திரும்புவதற்காக இந்த பஸ்சில் ஏறி காத்திருந்தனர். ஆனால் பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இல்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் விரக்தியடைந்த அவர்கள் அருகில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசாரிடம், தங்கள் ஊருக்கு செல்வதற்கு இந்த ஒரு பஸ் தான் உள்ளது. ஆனால் டிரைவரும், கண்டக்டரும் இல்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் நடந்தும் செல்ல முடியாது. எங்கள் பகுதி யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே, நாங்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கோவிந்தராஜன், போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக தெரிவித்தார். அதன்பின்னர் மாற்று டிரைவர் மற்றும் கண்டக்டருடன் மாணவ, மாணவிகள், பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததன் காரணமாக 6.30 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. மாணவ, மாணவிகள் 1 மணி நேரமாக பஸ்சுக்காக காத்திருந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com