தேசூரில், 6-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

தேசூரில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசூரில், 6-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு
Published on

திருவண்ணாமலை,

வந்தவாசியை அடுத்த தேசூர் பகுதியில் பாழடைந்த கோட்டை மற்றும் சிலைகள் இருப்பது குறித்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், பேராசிரியர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தேசூர் வருவாய் உதவியாளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் உடன்இருந்தனர்.

அப்போது பாழடைந்த நிலையில் ஒரு மசூதி போன்ற கட்டிடமும் அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவை 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும்.

இதுகுறித்து வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறியதாவது:-

தேசூரில் கிடைத்த எழுத்துடைய 2 நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் என்றும், மற்றொன்றில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீரனின் கையில் கத்தியும், கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற் குறிப்பிட்ட கொற்றம்பாக் கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சீயமங்கலத்து பாணரைசரு என்ற வாசகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார். இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரைசர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்க வேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம்.

பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப்பிடும் கொற்றம்பாக் கிழார் இருந்திருக்க வேண்டும். கொற்றம்பாக் என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம். தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம். சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது தேசூருக்கு அருகில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கிடைத்த நடுகற்களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இதுவேயாகும். இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கு சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com