தாராபுரத்தில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

தாராபுரத்தில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாராபுரத்தில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
Published on

தாராபுரம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. இதனால், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வாகனங்களில் பணமோ அல்லது எந்த விதமான பொருட்களோ கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல வேண்டியது இருந்தால், அதற்கான தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

உரிய ஆவணம் எதுவுமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை வாகன சோதனையின் போது கண்காணித்து, அவைகளை பறிமுதல் செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில், அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை தாராபுரம்ஒட்டன்சத்திரம் சாலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சையது இசாக் ஆகியோர் தலைமையில், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, பாறையை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தப்படும் 200 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை அந்த காரில் மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 56) மற்றும் செல்வராஜ் (65) என்பது தெரியவந்தது. மேலும் அவினாசிபாளையத்திலிருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் வரையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை திட்டத்தில், சாலையோரமாக உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக, எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.

ஆனால் இந்த வெடிபொருட்கள் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆபத்தான வெடிபொருட்களை வாகனத்தில் கொண்டு சென்றதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து தாசில்தார் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். வெடிபொருட்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் மூலனூர் போலீசாரிடம் வெடிபொருட்களை ஒப்படைத்தார். இது தொடர்பாக ஷாஜகான் மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com