தர்மபுரியில், தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரியில் தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரியில், தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாரி டிரைவர்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடக்கநிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிக தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கொரோனா அறிகுறி உள்ள நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள தளவாய் அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னமூர்த்தி (வயது 45). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக நாமக்கல்லில் அவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் பரிசோதனை செய்த போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர் தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனிமைப்படுத்தும் மையத்தில் நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சென்னமூர்த்தி நேற்று பிற்பகலில் இறந்து கிடந்தார்.

தற்கொலை

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சென்னமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனிமைப்படுத்தும் மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com