எண்ணூரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

எண்ணூரில், பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
எண்ணூரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
Published on

திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 53-வது பிளாக்கை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன் பாண்டியன் என்ற கருப்பு பாண்டியன் (வயது 33). பிரபல ரவுடியான இவர், நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு காற்றுக்காக வாசலில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ரவுடி பாண்டியனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க பாண்டியன், தனது வீட்டின் உள்ளே ஓடினார்.

ஆனாலும் அவரை விடாமல் வீட்டின் உள்ளேயும் விரட்டிச்சென்று தலை உள்பட உடலின் பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த பாண்டியன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பாண்டியன் இறந்துவிட்டதை உறுதி செய்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கொலையான ரவுடி பாண்டியன், 2013-ம் ஆண்டு கேட்டு சுப்பிரமணியன் என்பவரை கொலை செய்தார். சின்னபாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி என்பவரது கொலை வழக்கிலும் பாண்டியன் முக்கிய குற்றவாளி ஆவார். அத்துடன் பாண்டியன், தனது எதிரிகளையும் அவ்வப்போது மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கேட்டு சுப்பிரமணியனை கொலை செய்ததற்கு பழிக்குப்பழியாக பாண்டியனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து எண்ணூரை சேர்ந்த கங்காதரன், திருவொற்றியூர் வடக்கு மாடவீதியை சேர்ந்த அருண் (20) உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com