எண்ணூரில் பயங்கர தீ விபத்து: 60 குடிசைகள் எரிந்து நாசம்

எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விஸ்தரிப்பு பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வெளி மாநிலத்தவர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
எண்ணூரில் பயங்கர தீ விபத்து: 60 குடிசைகள் எரிந்து நாசம்
Published on

திருவொற்றியூர்,

இந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ஆந்திராவை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சீரஞ்சிவி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவரது வீட்டில் திடீரென்று தீ பிடித்தது.

அப்போது காற்று வேகமாக வீசவே தீ மளமளவென அருகில் இருந்த குடிசை வீடுகளிலும் பரவியது. பெரும்பாலானோர் வேலைக்கு சென்று விட்டதால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. இதனால் வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட் கள் எரிந்து நாசமானது.

இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள்.

தீ எரியும் போது காற்று பலமாக வீசியதால் தீயணைப்பு வீரர்களை கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதனால் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 60 குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டது.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார். சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன், தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மாநகராட்சி மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் முதலில் தீ பிடித்த சிரஞ்சீவி என்பவருடைய வீட்டில் கரி அடுப்பு பயன்படுத்தி சமையல் செய்து வந்ததும், காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அடுப்பை சரியாக அணைக்காமல் சென்று விட்டதால், தீ காற்றில் அடித்து செல்லப்பட்டு தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com