ஈரோட்டில், மாணவ-மாணவிகள் மனிதசங்கிலி போராட்டம் - பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் உருவப்படங்களை எரித்தனர்

ஈரோட்டில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் உருவப்படங்களை எரித்தனர்.
ஈரோட்டில், மாணவ-மாணவிகள் மனிதசங்கிலி போராட்டம் - பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் உருவப்படங்களை எரித்தனர்
Published on

ஈரோடு,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கும்பலை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று மதியம் போராட்டம் நடத்துவதற்காக பெருந்துறை ரோட்டுக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் உருவப்படங்களை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள், பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவ-மாணவிகள் திண்டல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். கைதான 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ -மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என மாணவ-மாணவிகளை எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com