குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

வெங்கல் அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 30). அலமாதி கிராமத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லாவண்யா (24). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் திருமால்பூர் ஆகும்.

இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரோகிணி (5) என்ற மகளும், அமலேஷ் (3) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். பாபு தனது தாயார் ரமா மற்றும் சகோதரர் பாலாஜியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பாபுவுக்கும், லாவண்யாவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை மனைவியிடம் சொல்லாமல் பாபு வேலைக்கு சென்று விட்டார்.

நேற்று மாலை லாவண்யாவின் அறைக்கு ரமா சென்றார். அங்கு தனது 2 குழந்தைகளுடன் மின் விசிறியில் சேலையை கட்டி தூக்கில் லாவண்யா பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமா அலறினார். உடனே பாலாஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கியவர்களை இறக்கினர்.

அப்போது 3 பேருமே இறந்தது தெரியவந்தது. குடும்பத்தகராறில் தனது குழந்தைகளை கொன்று லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com