டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில் சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில் சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்
Published on

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு விதைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு நெல் மற்றும் பயிறு வகை, தென்னங்கன்று உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காடையாம்பட்டி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் பண்ணை நிலத்தின் நடுவே தான் ஏற்காடு மலையில் இருந்து வரும் மேற்கு சரங்கா ஆறு ஓடுகிறது.

மேலும் இந்த நிலத்தின் வழியாகத்தான் பல ஆண்டுகளாக வாளியாந்தோப்பு, பக்கிரிகுட்டை, பெத்தேல் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதனிடையே இங்கு தார் சாலை பழுதடைந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒன்றிய பொதுநிதியில் தார்சாலை புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் விதைப்பண்ணை பஸ் நிறுத்தத்தில் இருந்து விதைப்பண்ணை நிலத்துக்கு இடையே செல்லும் தார் ரோட்டில் யாரும் செல்ல கூடாது என காடையாம்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரோட்டில் யாரும் செல்ல கூடாது என குழியை தோண்டி உள்ளனர். மேலும் பண்ணை நிலத்திற்கு இடையே செல்லும் சரபங்கா ஆற்றுக்கும் யாரும் செல்ல கூடாது என கம்பி வேலி அமைத்தனர்.

இதனால் அரசு விதைப்பண்ணை நடுவே உள்ள சாலையை பயன்படுத்த முடியாததால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ரோட்டில் தோண்டிய குழியை மூடவேண்டும் எனவும், ஆற்றில் ஆடு, மாடுகளை மேய்க்க செல்லும் வகையில் கம்பி வேலியை அகற்ற வேண்டும் எனவும் கோரி நேற்று அரசு விதைப்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனத்தை சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், சிறிது நேரத்தில் அவர்களே பள்ளி வாகனத்தை விடுவித்து விட்டு, கலைந்து சென்றனர்.

இதுகுறித்து காடையாம்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் கேட்டபோது, அரசு விதைப்பண்ணை நடுவே உள்ள தார் சாலை வேளாண்மை துறை நிதியில் போடப்பட்டது. டேனிஷ்பேட்டை விதைப்பண்ணையில் உள்ள மின் மோட்டார் கம்பிகள் 100 மீட்டர் திருட்டு போய் உள்ளது. மேலும் தென்னை பண்ணையில் தென்னங்கன்று திருட்டு போகிறது. தென்னங்கன்றை சேதப்படுத்தி விடுகின்றனர். அதனால் இரவில் மட்டும் கேட்டை பூட்ட சொல்லி இருக்கிறேன். மின் கம்பி திருட்டு போனது சம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com