கூடலூரில், ரத்ததானம் செய்ய வந்த போலீசார் ஏமாற்றம்

கூடலூரில் ரத்ததானம் செய்ய வந்த போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலூரில், ரத்ததானம் செய்ய வந்த போலீசார் ஏமாற்றம்
Published on

கூடலூர்,

கூடலூர் தாலுகாவின் தலைமை அரசு ஆஸ்பத்திரி மேல்கூடலூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர வனவிலங்குகள் தாக்குதல், விபத்துகளில் சிக்கி பலத்த காயங்கள் அடையும் பொதுமக்களுக்கு அவசர சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இங்கு சில நேரங்களில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு ரத்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இதையொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்கூடலூரில் ரத்த வங்கி திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. நேற்று முன்தினம் போலீசார் ரத்ததானம் வழங்கும் முகாம் நடத்தினர். முகாமை கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முகாமில் 75 போலீசார் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்க வந்து இருந்தனர். ஆனால் 15 போலீசாரிடம் மட்டுமே ரத்தம் பெறப்பட்டது. இதனால் மீதமுள்ள போலீசார் ரத்ததானம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அவர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்யப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடன் ரத்ததானம் சய்ய வரலாம் என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ரத்த வங்கி நிர்வாகம் தரப்பில் விசாரித்த போது, தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 யூனிட் வரை ரத்தம் சேகரித்து பாதுகாக்கப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. தன்னார்வ முகாம் நடத்தி கொடையாளர்கள் ரத்தம் வழங்க முன் வந்தாலும் அதை சேமித்து வைக்கக்கூடிய வசதி ரத்த வங்கியில் இல்லாதது பல்வேறு அமைப்பினரையும் கவலை அடைய வைத்துள்ளது.

இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-

பந்தலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தாலும் அவசர மற்றும் ஆபத்தான காலக்கட்டங்களில் நோயாளிகள் கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இங்கு நோயாளிகளுக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாக ஊட்டி அல்லது கோவைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர். இதனால் ரத்த வங்கியை பயன்படுத்தும் வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை.

தன்னார்வலர்கள் முகாம் அமைத்து ரத்த கொடை வழங்க முன்வந்தாலும், ரத்தத்தை சேமித்து வைக்கும் வசதி கிடையாது. இவ்வங்கிக்கு என தனியாக லேப் டெக்னீஷியன், ரத்த பரிசோதகர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை நியமிக்கப்பட வில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் ரத்த பரிசோதகர் கொண்டு கொடையாளர்களிடம் குறைந்த அளவு ரத்தம் சேகரிக்கப்படுகிறது. எனவே ரத்தம் அதிகம் சேகரித்து பராமரிக்கும் வகையில் கூடலூர் ரத்த வங்கியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com