கூடலூர், பந்தலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

கூடலூர், பந்தலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடலூர், பந்தலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
Published on

பந்தலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் ஆதிவாசி கிராமங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் உள்ள தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அனைவருக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்படும். எனவே ஒவ்வொரு தொழிலாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்கு அளிக்கப்பட்டது என்பதை சரிபார்க்கும் கருவியும் பொருத்தப்படும். அதன் மூலம் சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் வாங்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார் நடேசன், தேர்தல் உதவியாளர் சக்கீர், வருவாய் ஆய்வாளர் காமு, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர்கள் சிவக்குமார், லோகநாதன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் ஆதிவாசி மக்கள் நடனமாடியவாறு, அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தாசில்தார் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com