கூடலூரில் பலாப்பழ விளைச்சல் அமோகம்

கூடலூரில் பலாப்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.
கூடலூரில் பலாப்பழ விளைச்சல் அமோகம்
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. பிற விவசாய நிலங்களிலும் பலா விளைவிக்கப்படுகிறது. பொதுவாக கூடலூர் பகுதி மக்கள் பலாப்பிஞ்சுகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதோடு, குறைந்த அளவு வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. மேலும் கூடலூரில் பலாப்பழ விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ஆனால் விளைச்சலுக்கு ஏற்ப பலாப்பழங்களை சந்தைப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் மரங்களில் இருந்து பலாப்பழங்கள் பழுத்து கீழே விழுந்து அழுகி வீணாகும் நிலை காணப்படுகிறது.

அழுகி வீணாகிறது

எனவே பலாப்பழங்களை முறையாக சந்தைப்படுத்தவோ அல்லது மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூரில்தான் அதிகளவில் பலாப்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் பலாப்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் பலாப்பழங்களை கொண்டு பழரசம் தயாரித்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு பழரச தொழிற்சாலை உள்ளது. ஆனால் கூடலூரில் விளையும் பலாப்பழங்கள் உள்ளூர் மக்களின் தேவைக்கு போக மீதி காட்டுயானைகளுக்கு தீவனமாகிறது. இல்லையென்றால் அழுகி நிலத்தில் விழுந்து வீணாகிறது.

பழரச தொழிற்சாலை

விளைச்சல் அதிகம் இருந்தும், முறையாக சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட முடியாதது வேதனையாக உள்ளது. கூடலூரில் பழரச தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. எனவே இனிமேலாவது கூடலூரில் பழரச தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com