கூடுவாஞ்சேரியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பெண் ஊழியர் கைது கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல்

வீட்டுமனை வரைமுறை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடுவாஞ்சேரியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பெண் ஊழியர் கைது கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல்
Published on

வண்டலூர்,

சென்னையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் கூடுவாஞ்சேரி உஷா நகரில் சமீபத்தில் ஒரு வீட்டுமனை வாங்கியிருந்தார். இந்த வீட்டுமனையை வரைமுறை செய்வதற்காக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் வீட்டுமனை வரைமுறை செய்வதற்காக நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள தற்காலிக பெண் ஊழியர் செல்வி என்பவர் சண்முகத்திடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விருப்பம் இல்லாத சண்முகம் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்திடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து செல்வியிடம் கொடுக்கும்படி கூறினர். நேற்று மதியம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் செல்வியிடம் சண்முகம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாத படி அனைத்து கதவுகளையும் அடைத்தனர். மேலும் அலுவலக முன்பக்க இரும்பு கேட்டையும் பூட்டிக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். செல்வியிடம் தொடர்ந்து சோதனை செய்தபோது கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.

செல்வியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பேரூராட்சி செயல் அலுவலராக இருந்து சில தினங்களுக்கு முன்பு பணி மாறுதலில் சென்ற மகேஸ்வரன் என்பவர்தான் இந்த லஞ்ச பணத்தை வாங்க சொன்னார். ஆகவேதான் நான் பணத்தை வாங்கினேன் என்று கூறினார். கைது செய்யப்பட்ட செல்வி கடந்த 6 ஆண்டுகளாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக உதவி எழுத்தாளராக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த சோதனைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் புதிதாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக ரவி பதவியேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com