கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளி கொலையில் நண்பர் கைது

கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளி கொலையில் நண்பர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ளது தாமரை ஏரி. இதன் கரையோரம் கடந்த மாதம் 30-ந்தேதி காலை ஆண் ஒருவர் தலையில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது தலையில் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருப்பதும், கொலை செய்யப்பட்டவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உறுதியானது. ஆனால் பெயர் விவரம் தெரியவில்லை.

இந்த படுகொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை வைத்து கொண்டு வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதிகளில் போலீசார் கடந்த சில நாட்களாக இரவும் பகலுமாக தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் அதிரடி விசாரணையில் துப்பு துலங்கியது.

இந்தநிலையில் படுகொலை செய்யப்பட்டவர் ஓடிசாவை சேர்ந்த ராம்சந்திர பத்ரூ (வயது 40) என்பது தெரியவந்தது. எளாவூர் அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்த அவர், ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவரது நண்பர் பீகாரை சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா (28). இவர் சின்ன ஓபுளாபுரத்தில் உள்ள குடும்பத்தினருடன் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

ராம்சந்திரா பத்ரூவும், அவரது நண்பரான சந்தோஷ்குமார் சர்மாவின் மனைவியும் அடிக்கடி செல்போனில் பேசி கொள்வது வழக்கம். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சந்தோஷ் குமார் சர்மா, தனது நண்பரான ராம்சந்திர பத்ரூவை பல முறை எச்சரிக்கை செய்தும் பலனில்லை. சம்பவத்தின் முதல் நாளும் தனது வீட்டுக்கு ராம்சந்திர பத்ரூ வந்து சென்றதை அறிந்த சந்தோஷ் குமார் சர்மா மேலும் ஆத்திரம் அடைந்தார்.

இந்தநிலையில், திட்டம் வகுத்து நண்பர் ராம்சந்திரா பத்ரூவை கடந்த மாதம் 29-ந்தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் சந்தோஷ் குமார் சர்மா கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து வந்தார். அவருக்கு தாமரை ஏரிக்கரையோரம் உள்ள மதுக்கடை ஒன்றில் மது வாங்கியும் கொடுத்து உள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில் கள்ளக்காதல் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் ராமச்சந்திர பத்ரூவை அடித்து ஏரிக்கரையோரம் சந்தோஷ் சர்மா தள்ளியதாக கூறப்படுகிறது. போதையில் மயங்கி விழுந்த அவரது தலை மீது அருகே இருந்த பெரிய சிமெண்டு (ஹாலோ பிளாக் கல்) கல்லை எடுத்து சந்தோஷ் குமார் சர்மா போட்டு உள்ளார். இதில் ராம்சந்திர பத்ரூ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

போலீசாரிடம் சிக்கிய சந்தோஷ் குமார் சர்மா அளித்த மேற்கண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வடமாநில வாலிபர் கொலை வழக்கில் அவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com