இந்திய உள்விவகாரத்தில் சீனா தலையிடுவதை பிரதமர் கண்டிக்க வேண்டும் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தல்

இந்திய உள்விவகாரத்தில் சீனா தலையிடுவதை பிரதமர் கண்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய உள்விவகாரத்தில் சீனா தலையிடுவதை பிரதமர் கண்டிக்க வேண்டும் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீன அதிபர் ஜின்பிங் புதுவை அருகே உள்ள மாமல்லபுரத்துக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன அதிபர் இந்தியா வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருவரும் பேசியதாகவும், காஷ்மீரை சீனா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் சீன அதிபர் ஜின்பிங் கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்திய உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பிரதமர் கண்டிக்க வேண்டும்.

மேலும் காஷ்மீர் பகுதியை சீனா கண்காணிக்கும்போது, திபெத்தையும், ஹாங்காங்கையும், தென்சீன பகுதிகளையும் இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கும் என்று சீன அதிபரிடம், பிரதமர் நரேந்திரமோடி கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவும்போதுகூட மத்திய அரசு எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் காட்டுவதில்லை.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கும், அங்குள்ள தீவிரவாத குழுக்களுக்கும் ஆதரவாகவே சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்த போது அதை தனது அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது. எனவே, சீனாவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாதோர் சதவீதம் 7 ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 30 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73 ஆக மாறியுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது தான் இந்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக மத்திய அரசு கூறினாலும், அது உண்மையில் 2 சதவீதமாகவே உள்ளது.

புதுவை கவர்னர் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். அவருடன் சேருபவர்கள் மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் தடையாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், அனந்தராமன் எம்.எல்.ஏ, கட்சியின் மாநில துணைத் தலைவர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com