காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் முதியோர் உதவி தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கொடி நாள் நிதியாக ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் முதல் கட்டமாக ரூ.7 லட்சம் காசோலை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் முதியோர் உதவி தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கி பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.

அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இருளர் இன மக்கள் 9 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் முதல் கட்டமாக ரூ.7 லட்சம் காசோலையை கொடிநாள் நிதியாக வசூல் செய்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்நயீம் நேற்று வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் முதலாவதாக வந்து கொடி நாள் நிதி வசூலித்து வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com