கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடத்தில் கலெக்டர் அஞ்சலி

கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடத்தில், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மணக்குடி, கொட்டில்பாடு நினைவிடங்களில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கதறிஅழுது அஞ்சலி செலுத்தினார்கள்.
கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடத்தில் கலெக்டர் அஞ்சலி
Published on

கன்னியாகுமரி,

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுமத்ரா தீவின் கடற்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. இந்த ஆழிப்பேரலை தமிழக கடற்கரை கிராமங்களை பயங்கரமாக தாக்கியது.

குமரி மாவட்டத்தில் சுனாமியின் பாதிப்பு அதிகமாக இருந்தது. மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

சுனாமியில் பலியானவர்கள் நினைவாக கன்னியாகுமரியில் முக்கடல் சந்திப்பு கடற்கரை பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி இங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். அதன்படி, நேற்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், வசந்தகுமார் மற்றும் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் தம்பித்தங்கம் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நினைவு ஸ்தூபி முன் திரண்டு நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

மணக்குடியில் பங்குத்தந்தை கிளிட்டஸ் தலைமையில் பெண்கள் குழந்தைகள், சிறுவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. தேவாலயம் முன் தொடங்கிய ஊர்வலம் சுனாமியால் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்கு இறந்தவர்கள் நினைவாக பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நினைவிடத்தில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, உறவினர்களை இழந்த பெண்கள் கதறி அழுதனர்.

கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தில் 199 பேர் இறந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் நினைவாக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் தேவாலயம் முன் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இறந்தவர்கள் நினைவாக மவுன ஊர்வலமும், நினைவு திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை சகாய செல்வன் தலைமை தாங்கினார்.

இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் நினைவு ஸ்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com