கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு

கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க. சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
Published on

ஈரோடு,

கன்னியாகுமரி மாவட்டம் ஒகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜவுளிகள், அரிசி, சமையல் எண்ணெய், தார் பாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் நேற்று இரவு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வீடு, வாசல்களை இழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் 10 நாட்களாக வீடு திரும்பாததால் மீனவ பெண்கள் கவலையுடனும், வருத்தத்துடனும் உள்ளனர்.

கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர். எத்தனை பேர் காணாமல் போய் உள்ளனர் என்ற முழு கணக்கெடுப்பை கூட மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறி மீனவ பெண்கள் கதறி அழுது கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செய்யவேண்டும். ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாநகர் மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம், கரூர் மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ்கண்ணு மற்றும் பொறுப்பாளர்கள் ரமேஷ், கைலாசம், இளங்கோ, அருண்குமார், ரவி உள்ளபட பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com