கன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் - சுற்றுலா பயணிகள் அவதி

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் ஓடை உடைந்ததால் கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
கன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் - சுற்றுலா பயணிகள் அவதி
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை லாரி ஒன்று சென்றது. அப்போது சாலையில் இருந்த கழிவுநீர் ஓடையின் மூடி லாரியின் பாரம் தாங்காமல் உடைந்து நொறுங்கியது. மேலும் இடிபாடுகளும், மணலும் ஓடைக்குள் விழுந்து அடைத்து கொண்டதால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. இந்த நிலையில் மழையும் பெய்ததால் மழை நீரும், கழிவுநீரும் கலந்து சாலையில் ஆறுபோல ஓடியது.

மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகள், குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்தது. அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், கார்களால் சாலையோரம் நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் மீது கழிவுநீர் பட்டது. இதனால் அவர்கள் அவதிக்குள்ளாயினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், நகர சிவசேனா தலைவர் சுபாஷ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அத்துடன், கழிவுநீர் ஓடையை சீரமைக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை கன்னியாகுமரி பேரூராட்சி தொழிலாளர்கள் அங்கு சென்று கழிவுநீர் ஓடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு கழிவுநீர் சாலையில் ஓடுவது கட்டுப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com