கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் பைரதி பசவராஜ். இவர் எடியூரப்பாவின் மந்திரிசபையில் நகர வளர்ச்சி துறை மந்திரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பைரதி பசவராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு காய்ச்சல், சளி தொல்லையும் இருந்து வந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் தன்னை கொரோனா பரிசோதனைக்கும் பைரதி பசவராஜ் உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மந்திரி பைரதி பசவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நான் நன்றாக உள்ளேன். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மக்கள் என் மீது வைத்து உள்ள அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மந்திரி பைரதி பசவராஜ் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரி சுதாகர் மற்றும் மந்திரிகள் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

துமகூரு புறநகர் தொகுதியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) சார்பில், கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் கவுரிசங்கர். இவர் தனது தொகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுரிசங்கர் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சலும் இருந்தது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் கவுரிசங்கர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் டாக்டரின் ஆலோசனையின்பேரில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கவுரிசங்கர் எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டரின் ஆலோசனையின்படி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com