கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் தலா 30 மாதங்கள் ஆட்சி?

கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) - காங்கிரஸ் கட்சிகள் தலா 30 மாதங்கள் ஆட்சி செய்யுமா? என்பதற்கு குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் தலா 30 மாதங்கள் ஆட்சி?
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்மந்திரியாக பொறுப்பு ஏற்றார். ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடியூரப்பா தனது முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஜனதாதளம் (எஸ்)காங்கிரஸ் கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வருகிற 23ந்தேதி முதல்மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையே, கூட்டணி ஆட்சி தொடர்பாக பல்வேறு தகவல்களும், புதுப்புது வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தலா 30 மாதங்கள் ஆட்சி செய்யும் என்று தகவல் வெளியானது. இதுபற்றி நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் பதிலளித்து கூறுகையில், காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சியை பகிர்ந்துகொள்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் எதுவும் பேசவில்லை. இந்த தகவல் வெறும் வதந்தி. அதேப் போல் ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் ஆகிய சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர்களுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com