கர்நாடகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகத்தில் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கர்நாடகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு - கர்நாடக அரசு அறிவிப்பு
Published on

பெங்களூரு,

ஊரடங்கு தளர்வு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். அனைத்து பொது இடங்களிலும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எந்த நிறுவனமோ அல்லது பொது இடங்களின் மேற்பார்வையாளரோ பொது இடத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சமூக விலகல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. இறுதிச் சடங்கு மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மேல் சேரக்கூடாது. அங்கும் சமூக விலகல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொது இடத்தில் எச்சில் துப்புவது அபராதத்திற்குரிய குற்றமாகும். பொது இடத்தில் மது குடிப்பது, புகையிலை, சிகரெட் பயன்படுத்த அனுமதி கிடையாது. 4-ந் தேதி (நாளை) முதல் மதுபானம், புகையிலை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் அங்கு ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுபான கடைகளுக்கு அனுமதி இல்லை. இந்த மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் திறந்திருக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் (சூப்பர் மார்க்கெட்டு) உள்ள மதுபான கடைகள், மதுபான விடுதிகள் திறக்க அனுமதி கிடையாது. மேலும் அங்கு மது குடிக்கவும் அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறும் மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். பணியாற்றும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். அங்கு தேவையான அளவுக்கு முகக்கவசங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் சமூக விலகல் பின்பற்றப்படுவதை அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உறுதி செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் வாகனத்திலும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

கிருமிநாசினியை தெளித்து...

நிறுவனங்களில் சானிடைசர் திரவம், தெர்மல் ஸ்கேனர் வசதியை வைத்திருக்க வேண்டும். மேலும் அங்கு கைகளை கழுவும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். ஷிப்டு மாறும்போது, பணி இடங்களை கிருமிநாசினியை தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். பணியாளர்கள் வந்து செல்லும் இடம், கதவு கைப்பிடி போன்றவற்றை கிருமிநாசினியை கொண்டு துடைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம். இதை அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை ஒரு இடத்தில் கூடி கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை நிறுவனங்களில் இருக்க வேண்டும்.

பரிசோதிக்க வேண்டும்

தொழிலாளர்களுக்கு ஏதாவது கொரோனா அறிகுறி இருந்தால், உடனடியாக அத்தகையவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வரை அந்த கொரோனா அறிகுறி உள்ளவர்களை உடனே அலுவலகத்திற்குள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com