கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி

கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
Published on

பெங்களூரு,

தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உலக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினோம். அவர்களில் 40 முதலீட்டாளர்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இதன் முடிவுகள், வருகிற நவம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

சமீபத்தில் கவுகாத்தியில் முதலீட்டாளர்களை சந்தித்து, கர்நாடகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தோம். குறிப்பாக நுகர்வார் பொருள் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம். பெங்களூருவில் மக்கள் தொகை பெருக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால் நகரம் விழிபிதுங்கி நிற்கிறது. அதனால் நாங்கள் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தலைநகரங்களை தவிர்த்து மற்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடகத்திலும் பெங்களூரு தவிர்த்து மற்ற நகரங்களில் தொழில் தொடங்க நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள், நேரடியாக நிலத்தை வாங்க முடியும். ஆனால் கர்நாடகத்தில் நிலம் வாங்க சில விதிமுறைகள் உள்ளன. இவற்றை எளிமைபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அத்தகைய நிலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நிலங்களை அரசே மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதாவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களின் தொகுதியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால் எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com