கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீராமுலு, பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 37 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

உடுப்பி மாவட்டம் காபு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் லாலாஜி ஆர்.மென்டன். இவரது உதவியாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த லாலாஜி ஆர்.மென்டன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

38 ஆக உயர்வு

மேலும் லாலாஜி ஆர்.மென்டன் எம்.எல்.ஏ. தன்னை கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று லாலாஜி ஆர்.மென்டனின் மருத்துவ அறிக்கை சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து லாலாஜி ஆர்.மென்டன் எம்.எல்.ஏ. தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் நான் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்தேன். தற்போது என்னை அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் கொரோனா மையத்தில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

லாலாஜி ஆர்.மென்டனுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com