கருமந்துறையில் கூட்டுறவு சங்க தலைவி, கணவருக்கு அரிவாள் வெட்டு

கருமந்துறையில் கூட்டுறவு சங்க தலைவி, கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கருமந்துறையில் கூட்டுறவு சங்க தலைவி, கணவருக்கு அரிவாள் வெட்டு
Published on

பெத்தநாயக்கன்பாளையம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கருமந்துறை மலைவாழ் மக்களுக்கான கூட்டுறவு சங்க தலைவியாகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனராகவும் உள்ளார். இவருடைய கணவர் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மோகன்.

இவர்களுக்கு பகுடுபட்டு பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. மோகன், அவருடைய தம்பி பெருமாள் ஆகிய இருவரும் ஒரே கிணற்றை விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மோகன் தனது பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்கும் நாள். ஆனால் அன்றைய தினம் அவருடைய தம்பி பெருமாள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து உள்ளார். அதற்கு மோகன் நான் தண்ணீர் எடுக்கக்கூடிய நாள், நீ எப்படி தண்ணீர் எடுக்கலாம்? என கேட்டுள்ளார்.

அப்போது பெருமாள் கையில் வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்ட முயன்றுள்ளார். அப்போது கையை குறுக்கே கொண்டு சென்றதால் கையில் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அவருடைய மனைவி தனலட்சுமி அங்கு வந்தார். அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் கருமந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரமேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் மெடிக்கல் ராஜசேகரன் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com