கரூரில், கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரங்கள்

கரூரில் கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கரூரில், கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரங்கள்
Published on

கரூர்,

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் விதமாக 52 விசைதெளிப்பான் எந்திரங்களும் மற்றும் சரக்குவேன், லாரிகளில் கிருமிநாசினியை வைத்து தெளிக்கும் விதமாக 6 தெளிப்பான்களும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது புதிதாக வீதிகளில் தெளிக்கும் விதமாக 5 நவீன தெளிப்பான் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனை தாந்தோணிமலையில் நகராட்சி பொறியாளர் நக்கீரன் முன்னிலையில் பணியாளர்கள் டிராக்டர் உள்ளிட்டவற்றில் பொருத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர். இந்த எந்திரம் மூலம் 2 ரப்பர் குழாய்களை இணைத்து சாலையின் இருபுறமும் தெளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீதிகளில் தெளிப்பதற்கு ஏதுவாக சேலம் மேட்டூரில் இருந்து 27 ஆயிரம் லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைடு கிருமிநாசினி திரவம் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 750 துப்புரவு பணியாளர்களை வைத்து சுழற்சி முறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சியை பொறுத்தவரையில் வீடுகள், கடைகள் வணிக நிறுவனங்களில் இருந்து தினமும் 70 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அதிகம் வந்து கொண்டிருந்தது. அதனை 120 கிலோ மீட்டர் தூரம் உள்ள அரியலூர் சிமெண்டு ஆலைக்கு கொடுத்து அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் பல்வேறு கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் பாலித்தீன் பை உள்ளிட்ட மக்காத குப்பைகளின் அளவானது கணிசமாக குறைந்திருக்கிறது. மக்களும் பொருட்கள், காய்கறிகள் வாங்க சாக்குபை, துணிப்பை உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை காண முடிகிறது.

ஊரடங்கு தளர்ந்த பிறகும் மக்கள் தொடர்ச்சியாக பாலித்தீன் பை உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் மேம்படும் என நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுங்ககேட் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மளிகை கடையில் கூட பை கொண்டுவரவும் என எழுதி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது கொரோனாவால் பலர் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகின்றனர். இதனால் கடன் கிடையாது எனவும் மளிகை கடைகளில் எழுதி உள்ளதை காண முடிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com