கீழக்குடிக்காட்டில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

கீழக்குடிக்காட்டில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழக்குடிக்காட்டில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், பெண்ணகோனம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்குடிக்காடு கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையை சீரமைப்பதற்காக, பழைய சாலை பெயர்த்து போடப்பட்டுள்ளது. அதில் சிறுபாலம் ஒன்று பழுதடைந்து முற்றிலும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள சாலையும் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி மன்ற தலைவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கும்போது, எங்கள் பகுதிக்கு மட்டும் ஏன் சாலை அமைப்பதில் காலதாமதம் செய்யப்படுகிறது என்று கேட்டு, விரைந்து சாலை அமைக்கக்கோரியும் பெரம்பலூர்- அகரம்சிகூர் சாலையில் கீழக்குடிக்காடு பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசையாக நிற்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் செல்லதுரை மற்றும் மங்களமேடு போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் சிறுபாலம் அமைத்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com