கொடுங்கையூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை

கொடுங்கையூரில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுங்கையூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை
Published on

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூரை அடுத்த மூலக்கடை சத்திய வாணிமுத்து தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவு லாரிகள் மூலம் மது பாட்டில்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு மதுக்கடையை திறந்தால் அருகில் உள்ள மருத்துவமனை, கோவில், பள்ளி, மசூதி, தேவாலயம் ஆகியவற்றுக்கு வரும் பெண்கள், பள்ளி மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நேற்று காலை புதிதாக திறக்க இருந்த மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன், கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு மதுக்கடை திறக்கப்படாது என அவர்கள் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று முற்றுகையை கைவிட்ட பொதுமக்கள், இதையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை செய்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக நேற்று மதுக்கடை திறக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com