

கோவில்பட்டி:
கோவில்பட்டி நியூ டவுன் ராவிள்ள கே.ஆர்.ஏ. வித்யாசரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராவிள்ள வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள், சுகாதார துறையுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தின. முகாமில் பொதுமக்கள் வந்த செல்ல வசதியாக பள்ளி நிர்வாகத்தினர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், கூடுதல் பஸ் நிலையம், வில்லிசேரி, இளையரசனேந்தல் பகுதிகளுக்கு பஸ் வசதி செய்திருந்தனர்.
முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா தொடங்கி வைத்தார். டாக்டர்கள் பிரனவ், சரவணன், தலைமையில் மருத்துவ குழுவினர் 252 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அறிவித்தபடி தடுப்பூசி போட்டவர்களில் 2 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட அத்தை கொண்டான் அழகர்சாமி, கோவில்பட்டி அரவிந்த் ஆகியோருக்கு பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் வசுந்தரா செல்வராஜ், ஸ்மார்ட் போன் பரிசளித்தார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, வட்டார மருத்துவர் உமா செல்வி, பள்ளி முதல்வர்கள் ஜான்சிராணி, செல்டன் காஸ் மாஸ், பள்ளி இயக்குனர் நிஷாஜாட்டின் கலந்து கொண்டனர்.