கோவில்பட்டியில் நுங்கு, பதநீர் விற்பனை மும்முரம்

கோவில்பட்டியில் நுங்கு, பதநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது
கோவில்பட்டியில் நுங்கு, பதநீர் விற்பனை மும்முரம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நுங்கு, பதநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

சீசன் தொடங்கியது

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நுங்கு, பதநீர் சீசன் தொடங்கி உள்ளது. பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் ஆங்காங்கே பனை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலும், பனங்காய்களை பறித்து நுங்கு விற்பனை தொழிலும் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கோவில்பட்டி நகரில் கடந்த சில நாட்களாக பதநீர், இளநீர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நகருக்கு தென்காசி மாவட்டம் சுரண்டை, சேந்தமங்கலம், வேலப்ப நாடானூர் பகுதியில் இருந்து வியாபாரிகள் வேன், மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் பதநீர், பணம் காய்களை அதிகாலையிலேயே கொண்டு வருகிறார்கள். கோவில்பட்டி மெயின் ரோடு, இளையரசனேந்தல் ரோடு, சுபா நகர் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக கடைகளை அமைத்து பதநீர், நுங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வம்

கோவில்பட்டி மெயின்ரோட்டில் தென்காசி மாவட்டம் வேலப்ப நாடானூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பதநீர், நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பதநீர், நுங்குகளை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வேலப்பநாடானூரை சேர்ந்த வியாபாகள் கூறுகையில், சுரண்டை, சேர்ந்தமங்கலம், வேலப்பநாடானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. பனை மரங்களில் மாலை நேரத்தில் பனங்காய்கள் பறித்தல், பதநீர் இறக்கும் பணிகள் தொடங்கும்.

அதிகாலையில் இவற்றை சேகரித்து இரண்டு சக்கர வாகனங்களில் கழுகுமலை, கோவில்பட்டிக்கு, எட்டயபுரம் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். நுங்கு ஒன்று ரூ.7-க்கும், 1 லிட்டர் பதநீர் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com