கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், 5-ம் தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி கடலையூர் ரோடு வள்ளுவர் நகரில் செயல்பட்ட டாஸ்மாக் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது அங்கு மீண்டும் டாஸ்மாக் கடையை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கைவிட வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று கோவில்பட்டி அருகே வில்லிசேரி இந்திரா காலனி பகுதி மக்கள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், வில்லிசேரியில் இருந்து இந்திரா காலனிக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதனால் அந்த சாலையின் அகலம் 6 மீட்டரில் இருந்து 3 மீட்டராக குறைந்து விட்டது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) காலையில் வில்லிசேரி நாற்கரசாலையில் மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கயத்தாறு மும்மலைப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனுவில், தன்னுடைய மனைவியை கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடத்தி சென்று விட்டார். மேலும் அவர் என்னை கொலை வழக்கில் சிக்க வைத்து விட்டு, எனது வீட்டில் இருந்த நகைகள், பணம், பொருட்களை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுக்களை பெற்று கொண்ட உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தி, இதுகுறித்து உதவி கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com