

கோவில்பட்டி:
களஞ்சியம் பெண் விவசாய சங்கத்தினர், ரேஷன் கடைகளில் மானாவாரி பயிர்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயிர்களை ரேஷன் கடைகளிலும், அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்டத்தில் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினா.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலத்தில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் மாதாங்கோவில் ரோடு வழியாக கிருஷ்ணன் கோவில் திடலை அடைந்தது. அங்கு முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மியடித்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா.
நிகழ்ச்சிக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் மேரி ஷீலா வரவேற்று பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், விவசாய சங்க நிர்வாகிகள் செல்வி, சுலோச்சனா, ஜெயலட்சுமி, ஆனந்த லட்சுமி ஆகியோர் பேசினா.