கோயம்பேட்டில் மொபட்டில் மாமியாருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கோயம்பேட்டில் மொபட்டில் மாமியாருடன் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் காயம் அடைந்தனர்.
கோயம்பேட்டில் மொபட்டில் மாமியாருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், வெங்கட கிருஷ்ணா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவரது மனைவி இந்திரா (34). நேற்று முன்தினம் காலை இந்திரா, அவரது மாமியார் பாலம்மாள் (68) ஆகியோர் மொபட்டில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இந்திரா மொபட்டை ஓட்டினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு மேம்பாலத்தில் மொபட் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

அப்போது மொபட் நிலைதடுமாறியதால் மாமியாரும்மருமகளும் அதில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கோயம்பேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்கள் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண் கேமராவில் பதிவாகி விடுகிறது. அதை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் கொள்ளையர்களை பிடித்து விடுகின்றனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்திராவிடம் நகை பறித்த மர்மநபர்களும் மேம்பாலத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா இல்லை என்பதை அறிந்து கொண்டே கைவரிசை காட்டி உள்ளனர்.

எனவே கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com