விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க கிருஷ்ணகிரியில், பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள்

கிருஷ்ணகிரியில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க கிருஷ்ணகிரியில், பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள்
Published on

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாய மின் இணைப்புக்காக தட்கல் முறையில் 40 ஆயிரம் பேரும், ஏற்கனவே பதிவு செய்த 10 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். இதற்காக நேற்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின் பகிர்மான கழகத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்க நேற்று அதிகாலை 4 மணி முதலே விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அரசு சார்பில் உரிய வழிக்காட்டு நெறிமுறைகள் வரவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 12 மணியை கடந்தும் விண்ணப்பங்கள் பெற தொடர்புடைய அலுவலர்கள் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கே பல மணிநேரம் காத்திருந்தனர்.

விவசாயிகள் அவதி

இதுகுறித்து தகவலறிந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விரைந்து வந்து மின்வாரிய அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் வரைவோலை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் பலர் கூட்டுறவு வங்கிகளில் வரைவோலை எடுத்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பத்துடன் பெறப்பட்ட வரைவோலைகளில் தொடர்புடைய வங்கிகளில் பணம் இல்லை என திருப்பி அனுப்பிவிட்டனர். எனவே, உயர் அலுவலர்களிடம் தகவல் வந்த பின்பே விண்ணப்பத்துடன், வரைவோலை பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

பின்னர் ஒரு நாள் மட்டும் அனைத்து வரைவோலைகள் ஏற்று கொள்வதாகவும், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே வரைவோலை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகளிடம் விண்ணப்பங்களை மின் வாரிய அலுவலர்கள் பெற்றனர். மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com