குளத்துப்பாளையத்தில் திறந்தவெளி ‘பாராக’ மாறிய சேமிப்பு கிடங்கு

தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் சேமிப்பு கிடங்கு திறந்தவெளி பாராக மாறி உள்ளது. இதனால் இருப்பு வைத்துள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குளத்துப்பாளையத்தில் திறந்தவெளி ‘பாராக’ மாறிய சேமிப்பு கிடங்கு
Published on

பேரூர்,

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு நெல், சின்ன வெங்காயம், கரும்பு, தக்காளி, மிளகாய், பீட்ரூட், பயிறு வகைகளை விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள்.

அறுவடை காலத்தில் விவசாய பொருட்களின் விலை குறைந்து விடுவதால், அவற்றை இருப்பு வைத்து விலை அதிகரிக்கும்போது விற்பதற்காக அரசு சார்பில் 2014-ம் ஆண்டு தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பொருட்களை இருப்பு வைக்கும் நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது.

இதனால் குளத்துப்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிறு வகைகளை அங்கு இருப்பு வைத்து உள்ளனர். இந்த சேமிப்பு கிடங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் மது குடிக்கும் பாராக மாறிவிட்டது. இதன் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால், அங்கு மதுபானங்களை வாங்க வரும் குடிமகன்கள், இந்த சேமிப்பு கிடங்கு கட்டிட வளாகத்துக்குள் வந்து மது அருந்தி செல்கிறார்கள். இது விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது.

இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த மஞ்சள், மக்காசோளம், கம்பு, சூரியகாந்தி விதை மற்றும் பல்வேறு வகையான பயிறு வகைகளை சேமிப்பு கிடங்கிற்குள் இருப்பு வைத்து உள்ளனர். இங்கு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு தினமும் 5 காசும், வியாபாரிகளிடம் 10 காசும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கு முழுவதும் விளைபொருட்கள் இருப்பதால் அதை மூடி வைத்துள்ளனர். பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் சென்று கேட்கும்போது, அதை திறந்து, பொருட்களை எடுத்து கொடுப்பார்கள். தற்போது அந்த சேமிப்பு கிடங்கு சரிவர பராமரிக்கப்படாததால், டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானங்களை வாங்குபவர்கள் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து அதன் வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். அத்துடன் போதிய பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் சூழ்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

எனவே கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். உடனே அவர் அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். ஆனால் இதுவரை அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலை நீடித்தால், போதை ஆசாமிகள் சேமிப்பு கிடங்கை உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் விளை பொருட்களை எடுத்து விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com