

குமாரபாளையம்,
குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோர பகுதிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையில் தண்ணீர் அதிகரிப்பால் குமாரபாளையத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 806 ஆண்கள், 898 பெண்கள் மற்றும் 384 குழந்தைகள் என மொத்தம் 2,088 பேர் அரசு அமைத்துள்ள 16 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோர பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.