மதுரவாயலில் தலையில் கல்லை போட்டு நண்பர் கொலை - கட்டிட தொழிலாளி கைது

மதுரவாயலில் ஒரே அறையில் தங்கியிருந்த நண்பரின் மணிபர்சை திருடியதால் ஏற்பட்ட தகராறில் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மதுரவாயலில் தலையில் கல்லை போட்டு நண்பர் கொலை - கட்டிட தொழிலாளி கைது
Published on

பூந்தமல்லி,

திருவள்ளூர், வேப்பம்பட்டை சேர்ந்தவர் முரளி (வயது 24). இவர் தனது நண்பர்களான கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் (25), அரவிந்த் (27), சுப்ரமணியன்(24) உள்ளிட்ட 3 பேருடன் மதுரவாயல் ஏரிக்கரை, முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு முரளி மற்றும் சிம்சன் இருவரும் அறையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த சிம்சன் அருகில் இருந்த கல்லை எடுத்து முரளியின் தலையில் போட்டார். இதனால் தலை நசுங்கியநிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முரளி துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, கொலை செய்துவிட்டு சிம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனையறிந்ததும் அறையில் இருந்த மற்ற நண்பர்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்ளிட்ட போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த முரளி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய சிம்சனை தேடிவந்தனர்.

முரளியை கொலை செய்து விட்டு சிம்சன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வந்த சிம்சனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முரளியின் மணிபர்சிலிருந்து பணத்தை திருடி சிம்சன் செலவு செய்து விட்டதாகவும், முரளியின் ஆதார் கார்டையும் எடுத்து மறைத்து வைத்து கொண்டு கொடுக்காமல் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. அதை முரளி கண்டித்ததால், ஏற்பட்ட தகராறு காரணமாக முரளியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com