மராட்டியத்தில் இருந்து வரத்து தொடங்கியது: பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.130 ஆக குறைந்தது

மராட்டிய மாநிலத்தில் இருந்து வரத்து தொடங்கி உள்ளதால் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.130 ஆக குறைந்தது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் மீண்டும் தங்களது வெங்காய வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்.
மராட்டியத்தில் இருந்து வரத்து தொடங்கியது: பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.130 ஆக குறைந்தது
Published on

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பெரிய வெங்காயம் சீசன் முடிந்து விட்டதால் கர்நாடகாவில் இருந்து வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் வெங்காய சீசன் முடிவடையும் நிலையில் தற்போது அங்கு கடுமையான மழை பெய்யத்தொடங்கிவிட்டது. இதனால் விளைச்சல் மற்றும் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த காரணங்களால் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் வெங்காயம் வாங்கும் அளவை குறைத்து விட்டனர். வெங்காயம் வரத்தும் குறைந்து விட்டதால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

வெங்காயத்தின் விலை உயர்வு மற்றும் விற்பனை ஆகாததன் காரணமாக தள்ளுவண்டி வியாபாரிகள் பலர் வெங்காயம் வியாபாரத்தை விட்டு விட்டு நிலக்கடலை, குச்சிக்கிழங்கு போன்ற வேறு பொருட்களை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து மீண்டும் நேற்று 15 டன் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் முதல் தரம் ரூ.130-க்கும் 2-ம் தரம் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 3-வது தரமான சிறிய ரகம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஒரு மாதமாக வியாபாரத்தை விட்டிருந்த சில தள்ளுவண்டி வியாபாரிகளும் வெங்காயத்தை வாங்கிச்சென்று வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். விலை குறைந்துள்ளதால் இனி விற்பனை நன்றாக இருக்கும் என்று அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து மொத்த வியாபாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய வரத்து மீண்டும் தொடங்கி விட்டது. இன்று (நேற்று) 15 டன் வெங்காயம் வந்துள்ளது. வெங்காயம் நல்ல தரமானதாக இருப்பதாலும், விலை குறைந்துள்ளதாலும் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி விட்டது. நாளை (இன்று) மேலும் 15 டன் வெங்காயம் வர உள்ளது. இதனால் இன்னும் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இலங்கை வெங்காயத்துக்கு ஆர்டர் கொடுத்து இருந்தோம். அது வந்து சேர இன்னும் 4 நாட்கள் ஆகும். அதற்குள் மராட்டிய மாநில வெங்காயமே தேவையான அளவு வந்து விடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com