மராட்டியத்தில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மராட்டியத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,761 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 127 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மராட்டியத்தில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Published on

மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 187 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 17 பேரின் உயிரை கொரோனா பறித்தது. இதில் மும்பையில்மட்டும்12 பேர் பலியானார்கள். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 14-ந்தேதி முடியும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார்.

ஊரடங்கு நீட்டிப்பு

இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ மூலம் மாநில மக்களிடம் பேசினார். அப்போது மராட்டியத்தில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும். இந்த காலக்கட்டத்தில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா கட்டுப்படுதலை பொறுத்து இந்த முடக்கநிலை தளர்த்தப்படும்.

33 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

மராட்டியத்தில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 19 ஆயிரம் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இது இந்தியாவுக்கே வழிகாட்டுதலாக உள்ளது.

கொரோனா இங்கிலாந்து பிரதமர் உள்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மராட்டியம் முதன்மை மாநிமாக உள்ளது.

பயப்பட வேண்டாம்

மும்பையை பொறுத்தவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் லேசான மற்றும் மிக லேசான பாதிப்புக்கு உள்ளானவர்கள். இறப்புக்கு ஆளானவர்கள் வேறு சில நோய் பாதிப்புக்கும் உள்ளானவர்கள். பலர் நோய் தாக்கத்தின் கடைசி கட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாக்கிறது. அனைவரும் வீடுகளில் தான் உள்ளனர். என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. கொரோனாவை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம். ஆனால் நாம் கொரோனாவை விரட்ட ஒன்றுப்பட்டு போராட வேண்டும்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பற்றிய விவரங்களை விமான நிலையங்களில் சேகரிக்கவும், அவர்களுக்கு கொரோனா கண்டறியும் சோதனை நடத்தவும் மத்திய அரசு தவறி விட்டது. ஆனாலும் இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாம் நிச்சயமாக கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com