

மும்பை,
மும்பை மால்வாணி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் பாண்டே. பா.ஜனதா வார்டு தலைவராக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வரும் கட்சி பணியாளர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தண்ணீர் மற்றும் டீ கொடுத்து வந்தார். அவர் இல்லாத நேரத்தில் அவரது 19 வயது மகள் உமேஷ் பாண்டேயின் அலுவலகத்துக்கு சென்று அவற்றை கொடுத்து வருவது வழக்கம்.
உமேஷ் பாண்டே அந்த இளம்பெண்ணுக்கு வேலை கிடைக்க உதவி செய்வதாக கூறியிருக்கிறார். சம்பவத்தன்று அந்த பெண்ணை இது தொடர்பாக பேசுவதற்கு தனது அலுவலகத்துக்கு அழைத்து உள்ளார்.
அதன்பேரில் அங்கு சென்ற இளம்பெண்ணை அவர் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உமேஷ் பாண்டேவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளார். மேலும் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உமேஷ் பாண்டேவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.