மணலியில் நாய் குட்டியை தரையில் வீசி துன்புறுத்திய வியாபாரி கைது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது

மணலியில் நாய் குட்டியை தூக்கி தரையில் வீசி துன்புறுத்தியதாக மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மணலியில் நாய் குட்டியை தரையில் வீசி துன்புறுத்திய வியாபாரி கைது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது
Published on

திருவொற்றியூர்,

மணலி சேலைவாயில் துர்கா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நேற்று முன்தினம் இரவு பதிவான காட்சிகளை பார்த்தார்.

அதில், இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கும் ஒருவர், ஆசையாக தனது காலை சுற்றி வந்த குட்டி நாயை கையில் தூக்குகிறார். திடீரென அவர், நாய் குட்டியை தரையில் தூக்கி வீசுவதும், அப்போது அதன் தாய் நாய் குரைத்தபடி ஓடிவருவதும், சிறிது நேரத்தில் தெருவில் உள்ள அனைத்து நாய்களும் அவரை சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளிதரன், அந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வெளியிட்டார். அது வைரலாக பரவியது.

இதை பார்த்த புளூகிராஸ் அமைப்பை சேர்ந்த வக்கீல் கஸ்தூரி என்பவர், மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நாய் குட்டியை துன்புறுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறி இருந்தார். அந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் நாய் குட்டியை தரையில் தூக்கி அடித்து துன்புறுத்தியது அதே சேலைவாயில் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பாலமுருகன் (வயது 55) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர், எனது கடைக்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினேன். ஆசையாக ஓடிவந்த குட்டி நாயை தூக்கியபோது, அதை பார்த்த அதன் தாய் நாய் என்னை கடிப்பதற்காக ஓடிவந்தது. இதனால் பயந்துபோன நான், கையில் இருந்த நாய் குட்டியை அதன் மீது தூக்கி வீசினேன். என்னை பாதுகாத்து கொள்ளவே நாய் குட்டியை தரையில் தூக்கி வீசினேன் என ஒப்புக்கொண்டார்.

பின்னர் கைதான பாலமுருகனை, மணலி போலீசார் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

சாலையில் செல்லும் சக மனிதரை ஒருவர் தாக்கும்போது அதனை வேடிக்கை பார்த்துவிட்டு செல்லும் மனிதர்கள் மத்தியில், நாய் குட்டியை தூக்கி வீசியதை கண்டவுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து நாய்களும் பாலமுருகனை சுற்றி வளைத்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com