மயிலாடுதுறையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்: வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு பஸ்களில் தூய்மை பணி

மயிலடுதுறையில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன. இதையொட்டி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு அங்கு கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 பணி மனைகளிலும் பஸ்களில் தூய்மை பணி நடைபெற்றன.
மயிலாடுதுறையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்: வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு பஸ்களில் தூய்மை பணி
Published on

மயிலாடுதுறை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. கோவில்களுக்குள் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். எப்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இருந்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தி உள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட உள்ளது. வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட இருப்பதால், மக்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வழிபாட்டு தலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த கோவில்கள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறையில் திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் கோபி தலைமையில் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். கோவிலின் வளாகத்தில் பக்தர்கள் வலம் வரும் பாதையில் மண்டிக்கிடந்த செடி, கொடிகள், புல்கள் அகற்றப்பட்டன. மேலும் கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்கள் தண்ணீர் ஊற்றி தூய்மை படுத்தப்பட்டது.

இதேபோல மயூரநாதர் கோவிலிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர், கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலம், திருவெண்காடு புதன் ஸ்தலம், சீர்காழி சட்டநாதர்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தன.

இன்று முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. இதையொட்டி நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மயிலாடுதுறை கிளை பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 73 பஸ்கள், சீர்காழி பணிமனையில் உள்ள 42 பஸ்கள் மற்றும் பொறையாறு பணிமனையில் உள்ள 29 பஸ்களில் தூய்மை பணி செய்து பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் செல்லும் பஸ்கள் தவிர்த்து, பிற பஸ்கள் அனைத்தும் இன்று இயக்கப்படுகின்றன. இதற்காக பஸ்கள் பழுது பார்க்கப்பட்டு, வாட்டர் சர்வீஸ் செய்து, கிருமிநாசினி தெளித்து போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டன. மயிலாடுதுறை கிளை மேலாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பணிகளை நாகை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com