மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு.
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
Published on

மயிலாடுதுறை,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செம்பியநல்லூர் ரெட்டக்குடி மேல தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன் மகன் முத்துராமன் (வயது 43). இவர் கடந்த 23-ந் தேதி மயிலாடுதுறை வள்ளலார்கோவில் மேல வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராமன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேநாளில் மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவை சேர்ந்த மணி (50) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஒரே நாளில் 2 இடங்களில் திருட்டு நடந்தது குறித்து மயிலாடுதுறை போலீசார் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். அதில் 2 மோட்டார் சைக்கிள்களையும் மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் ரூபன் (21), திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபன் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com