

மயிலாடுதுறை:
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பா.ம.க. உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ம.க.வினர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் காசி.பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கமல்ராஜா வரவேற்றார்.
இடஒதுக்கீடு
வன்னியர்களின் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களை திரட்டும் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையத்தின் பரிந்துரையை பெற்று தரவுகளின் அடிப்படையில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்ற வேண்டும். வன்னியர்களுக்கு உரிய தனி இட ஒதுக்கீட்டை வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகிகள் சேத்திரபாலபுரம் வைத்தி, தங்க.செந்தில்நாதன், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.