மேயர் பங்களாவில் பால்தாக்கரே நினைவிடத்துக்கான நிலம் ஒப்படைப்பு

மும்பை மேயர் பங்களாவில் பால்தாக்கரே நினைவிடத்துக்கான நிலம் உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேயர் பங்களாவில் பால்தாக்கரே நினைவிடத்துக்கான நிலம் ஒப்படைப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தின் முக்கிய அரசியல் சக்தியாக திகழ்ந்த சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள மேயர் பங்களாவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்படுகிறது. பால்தாக்கரே நினைவிடம் கட்ட மராட்டிய மந்திரி சபை நேற்று முன்தினம் ரூ.100 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்தது.

இந்த மாத இறுதியில் பால்தாக்கரே நினைவிடத்துக்கான பூமி பூஜை நடைபெறும் என கூறப்படுகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பால்தாக்கரேயின் 93-வது பிறந்தநாளான நேற்று, அவரது நினைவிடம் அமைய உள்ள மும்பை மேயர் பங்களாவில் உள்ள 11 ஆயிரத்து 551 சதுர மீட்டர் நிலத்தை நினைவிட பணிகளை செய்யும் பாலாசாகேப் தாக்கரே ராஷ்டிரியா ஸ்மரக் நியாஸ்' அறக்கட்டளையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று அங்கு வைத்து நடந்தது.

இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர். பால்தாக்கரே நினைவிடம் அமையும் மேயர் பங்களா நில ஆவணங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறக்கட்டளை தலைவரான உத்தவ் தாக்கரேயிடம் வழங்கினார். மேலும் இருவரும் சேர்ந்து பால்தாக்கரே நினைவிடம் அமையும் இடத்தில் கணபதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகளை செய்தனர்.

இதில் மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா, பூனம் மகாஜன் எம்.பி., சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரே மற்றும் பாஜனதா, சிவசேனா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com