மும்ராவில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து

மும்ராவில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்ராவில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து
Published on

தானே,

தானே மும்ரா சாம்ராட் நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை அவரது தாய்மாமன் மகனான 25 வயது வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவர் அந்த இளம்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் இளம்பெண் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

இது அந்த வாலிபருக்கு கோபத்தை உண்டாக்கியது. நேற்றுமுன்தினம் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்த வாலிபர் திருமணத்துக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தினார்.

அப்போது, இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதில் கோபம் அடைந்த வாலிபர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண் வேதனை தாங்க முடியாமல் அலறினார். இளம்பெண்ணின் சத்தம்கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மகள் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மகளை மீட்டு சிகிச்சைக்காக கல்வா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மும்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com